Chitirrai Thiruvizha - Day 9


உலகையே வென்றாள்; உவகை கொண்டாள்: மங்கல ஒலி முழங்க, நல்லோர் வாழ்த்த, வேதமந்திரங்கள் முழங்க, தடாதகைப்பிராட்டிக்கு மணிமுடி சூட்டி மகிழ்ந்தான் மலையத்துவஜ பாண்டியன். அந்தப் பெண்ணரசியின் ஆட்சியில் பாண்டிய நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். கன்னிப்பெண் நல்லாட்சி செய்ததால் பாண்டியநாடு "கன்னிநாடு' என்று சிறப்பு பெற்றது. அந்த வீரத்தலைவி எட்டுத்திக்கிலும் படையெடுத்துச் சென்று பூமண்டலம் முழுவதையும் வென்று வெற்றிக்கொடி நாட்ட புறப்பட்டாள் தடாதகை என்னும் பெயர் கொண்ட அன்னை மீனாட்சி.

அமைச்சர் சுமதி மற்றும் மந்திரி பிரதானிகள் போருக்கு ஆயத்தமாயினர். பேரிகைகள் முழங்கியது, தாரை தப்பட்டை ஆர்ப்பரித்தது. இடி முழங்கியது போல் சங்க நாதம் ஒலித்தது. தடாதகைப்பிராட்டியார் வில், அம்பு, கத்தி, கேடயம் ஏந்தி போர்க்கோலம் பூண்டாள். தென்னகம் முதல் வடபுலம் வரை வெற்றிக்கொடி நாட்டினாள். பூவுலகத்தை தன் வசமாக்கிய தேவி, தேவலோகத்துக்கும் சென்றாள். அங்கும் வெற்றியே. இறுதியில் பிராட்டியார், சிவபெருமான் அரசாளும் கயிலைமலையையே சென்றடைந்தாள். கயிலாயம் முழுவதும் போர் முழக்கம் ஒலித்தது. எங்கும் சங்கநாதம் முழங்க கேட்ட காவலர்கள் நந்திதேவரிடம் பாண்டிய நாட்டு பெண்ணரசி தடாதகைப்பிராட்டியார் படையெடுத்து வந்த செய்தியைத் தெரிவித்தனர். நந்திதேவர் அனுப்பிய சிவகணங்கள் படைகள் யாவும் பிராட்டியாரின் படையினர் முன்னர் தோற்று நின்றனர்.
பின்னர் சிவபெருமான் தன் மலர் வாயால் புன்னகை புரிந்து,""நானே வருகிறேன்; அப்பெண்ணரசியை வெல்கிறேன்,'' என்று போருக்குப் புறப்பட்டார். போரில் யாருக்கும் சளைக்காத தடாதகைப்பிராட்டியார் இறைவனின் செழுங்கடைக்கண் கண்ட அந்த கணமே பெண்மைக்கே உரிய நாணத்தால் புளகாங்கிதம் அடைந்தாள். அவள் பிறந்த போது மூன்று தனங்களுடன் வித்தியாசமாக பிறந்தாள். அதில் ஒன்று எந்த ஆடவன் முன்பு மறைகிறதோ, அவரே அவளுக்கு கணவன் என்பது ஏற்கனவே அறிந்த செய்தி. அப்போது அவளது ஒரு தனம் மறையவே, நாணம் கொண்டாள். அன்னையை வீரத்தால் ஜெயிக்க வந்தவர் காதலால் ஜெயித்தார். பரம்பொருளான சிவனே தன் மணாளன் என்பதை உணர்ந்தாள் தடாதகைப் பிராட்டியார். எட்டுத் திக்கும் வெல்ல திக்விஜயம் புறப்பட்ட பிராட்டியார் சிவ பரம்பொருளையே தன் மணாளனாக அடைந்தாள். ஒன்பதாம் திருவிழாவான இன்று, இந்த திக்விஜய அலங்காரத்தில், மதுரை மீனாட்சி மாசிவீதிகளில் உலா வருவாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...