
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று காலை 7.10 மணிக்கு நடந்தது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக ஆட்டம், பாட்டத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா ஏப்., 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு பிறகு, மே 7ல் அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார்.
நேற்று முன்தினம் காலை மூன்றுமாவடியில் அவரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நடந்தது. இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் எழுந்தருளினார். அதிகாலை திருமஞ்சனம் நடந்தது. பின், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள, அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது. அங்கிருந்து தமுக்கம் கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு வந்த அழகர், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின், தங்கக் குதிரையில் ஒவ்வொரு மண்டகப் படிகளிலும் சென்று வந்தார்.
இதற்கிடையே அழகரை வரவேற்க, வெள்ளிக் குதிரையில் வீரராகவ பெருமாள் காலை 6.50 மணிக்கு ஆற்றுக்கு வந்தார். காலை 7.10 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி, "கோவிந்தா... கோவிந்தா...' என்று பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே வைகையாற்றில் இறங்கினார். சுற்றியிருந்த பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்பதற்காக, ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட மண்டகப்படியை சுற்றி வந்து அருள் பாலித்தார். இதை தொடர்ந்து, வீரராகவ பெருமாள் மூன்று முறை அழகரை வலம் வந்து முதல் மரியாதை ஏற்றுக் கொண்டார். தீபாராதனைக்கு பிறகு காலை 8 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டார்.
* அங்கு மதியம் தீர்த்தவாரி உற்சவமும், அங்கப் பிரதட்சணமும் நடந்தது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் எழுந்தருளினார்.
* இன்று காலை 7 மணிக்கு சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். பின், மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் திருமஞ்சனமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கிறார். இரவு மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு திரும்பும் அழகருக்கு, 11 மணி முதல் தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
* நாளை இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி பூப்பல்லக்கில் அழகர் கோவிலுக்கு புறப்பட்டு, வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு கோவிலை சென்றடைகிறார்.
Source : http://www.dinamalar.com/
To view all the photos related to Chitirrai tiruvizha , check this link :
http://www.dinamalar.com/top_album/meenakshi_Chithirai_Festival_2009/index.html