Chitirrai Thiruvizha - தேர்த்திருவிழா


தேரோடும் நம்ம சீரான மதுரையிலே: மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவில் முத்திரை பதிக்கும் தேர்த்திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. மீனாட்சியும், சொக்கநாதரும் தனித்தனி தேர்களில் பவனி வந்தார்கள். இந்த தேர்களை பிரம்மதேவனே சாரதியாக இருந்து செலுத்தினார்.
திரிபுரங்கள் எனப்படும் பறக்கும் கோட்டைகளை தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்களுக்கு சிவபெருமான் அவர்கள் செய்த தவபலனுக்காக வழங்கியிருந்தார். அவர்கள் அவற்றில் அமர்ந்து பறந்து, கண்ட கண்ட இடங்களில் இறங்கி தேவர்களைக் கொன்று குவித்தனர். சிவபெருமான் தேரில் விரைந்து சென்று அவர்களை அழித்தார். கொடுத்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் அழிந்து போவார்கள் என்பதே தேரோட்ட தத்துவம்.
புராணங்களில் சொல்லப்படும் அசுரர்கள் என்பவர்கள் மனிதர்களிடமுள்ள ஆணவம், கன்மம் (தீயவினைகள்), மாயை (இவ்வுலக வாழ்வு நிலையானது என்று நினைத்து தவறு செய்யும் போக்கு) என்னும் மூவகை கெட்ட குணங்கள் ஆகும். இவற்றை தன் அருள்சக்தியால் அழித்து இறைவன் நமக்கு அருள்செய்கிறார். சித்திரைத் தேரோட்டம் பார்க்கச் செல்லும் அன்பர்கள், தங்களிடம் இருக்கும் இந்த மூன்று குணங்களும் முழுமையாக நீங்க பிரார்த்திக்க வேண்டும்.
மதுரையில் நாம் காணும் தேர்களை செய்தளித்த பெருமை ராணி மங்கம்மாளின் பேரனாகிய விஜயரங்க சொக்கநாத நாயக்கரையே (காலம் 1706-1732) சேரும். இத்தேர்களில் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்வுகளும், சிவமகாபுராணம் தொடர்பான சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. சுந்தரேஸ்வரர் தேரில் இடம் பெற்றுள்ள திருமால் தன் தங்கை மீனாட்சியை தாரை வார்த்து கொடுக்கும் சிற்பம் சிறப்பாக அமைந்துள்ளது. குழலூதும் கண்ணன், காளிங்க நர்த்தன கிருஷ்ணர், கஜலட்சுமி, இரண்ய சம்ஹாரம் போன்றவையும் தேர்ச்சிற்பங்களில் இடம்பெற்றுள்ளன. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் சங்கர நாராயணர் சிற்பமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
"ஊர் கூடித் தேர் இழுத்தது போல' என்பது சொல் வழக்கு. தேரினை தனிப்பட்ட மனிதன் இழுக்க முடியாது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இழுத்தால் தானே தேர் நகரும். ஊர் மக்கள் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்னும் உயர்ந்த பண்பை நமக்கு சொல்லித்தரும் நன்னாளாக தேர்த்திருநாள் அமைந்துள்ளது.
கோயிலுக்குச் சென்று நாம் இறைவனை வழிபடுவதை விட, நம்மை இறைவனே நாடி வருவது சிறப்பு. நம்மை கடைத்தேற்றுவதற்காக அம்மை மீனாட்சியும், அப்பன் சொக்கேசனும் தேரில் திருவீதி உலா வந்தார்கள். மாசிவீதிகளில் தேர் அசைந்தாடி வரும் அழகை, வைகைத் தலைவியை வாயாரப் பாடி மனதார மகிழ்ந்து மக்கள் கண்குளிரக் கண்டு களித்தனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...