சிவராத்திரி கொண்டாடுவது ஏன்


(This Article was published in Dinamalar paper )

ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே!
ஆதி சக்தி நாயகனின் துணை பெறுவோமே!
சிவராத்திரி விழா கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இறைவனை நினைக்காமலேயே பலனைக் கொடுக்கும் அரிய விரதம் இது.

* எலி ஒன்று சிவாலயத்திற்குள் வளைய வளைய வந்தது. அது மூலஸ்தான உச்சியிலுள்ள உத்தரத்தில் நின்றது. கீழே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த திரி அணையப் போகும் நிலையில் இருந்தது. விளக்கிலுள்ள எண்ணெயை குடிக்கும் நோக்கத்தில், அதில் குதிக்க, திரி தற்செயலாகத் தூண்டப்பட்டு எரிந்தது. இந்த ஒளியின் வெம்மை தாளாமல் அது ஓடி விட்டது. இப்படி தற்செயலாக விளக்கைத் தூண்டியதற்குரிய பலனை அது அடுத்த பிறவியில் அனுபவித்தது. அந்த எலியே மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்து, பெருமாளின் திருவடி கடாட்சத்தை அடைந்தது. மக்கள் இன்றும் அவரை திருவோணத் திருநாள் அன்று வரவேற்கிறார்கள். அசுரனாகப் பிறந்தாலும் நல்லாட்சி நடத்தி மக்களின் அபிமானத்தைப் பெற்றார்.

* மகாபாரத பீமன் தன் சகோதரர் தர்மர் நடத்திய யாகத்துக்கு பொருள் தேடிச் சென்றார். அப்போது, புருஷாமிருகம் என்ற ஒன்றைக் கண்டார். அது எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் சிவனை மட்டும் மனதிற்குள் தியானித்துக் கொண்டே இருக்கும். அந்த மிருகம் தங்களுடன் இருந்தால், யாகவேலைகளின் பெரும்பகுதியை அதுவே கவனித்துக் கொள்ளும் என்பதை அறிந்த பீமன், அதைத் தன்னுடன் வரும்படி அழைத்தான். அந்த மிருகம் ஒரு நிபந்தனை விதித்தது.


""நீ ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், எங்காவது நின்றால் உன்னைப் பிடித்துக் கொன்று விடுவேன். நிற்காமல் ஓடி உன் தேசத்து எல்லையைத் தொட்டு விட்டால் நான் உனக்கு உதவுவேன்,'' என்றது. பீமன் ஓடினான். இப்படி ஒரு விலங்கின் உதவி கிடைக்குமென அவனுக்கு கிருஷ்ணர் ஏற்கனவே சொல்லியிருந்ததுடன், சில மந்திரக்கற்களையும் கொடுத்திருந்தார். அவன் அவற்றை வரும் வழியில் ஒன்பது இடங்களில் போட்டான். அந்த கற்கள் லிங்கங்களாக மாறின. புருஷாமிருகம் அவ்வாறு லிங்கம் வந்த இடங்களில் நின்று வணங்கியது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட பீமன் வேகமாக ஓடி தன் எல்லைக்குள் ஒரு காலை வைத்தான்., புருஷாமிருகம் பிடித்துக் கொண்டது. அப்போது தர்மர் நியாயமான தீர்ப்பு வழங்கி, அவரவர் நிற்கும் பகுதி அவரவருக்கு உரியது என்றார். இந்த தீர்ப்பைப் பாராட்டிய சிவ பக்தனான புருஷாமிருகம் அவர் களது யாகம் சிறக்க உதவியது. இந்த சம்பவம் நிகழ்ந்தது ஒரு சிவராத்திரியில். மனிதன் நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.


* பிரம்மா பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற போட்டியில், சிவன் விண்ணுக்கும், மண்ணுக்குமாக எழுந்து நின்ற நாளே சிவராத்திரி என்றும் சொல்லப்படுவதுண்டு

கள்ள சிவன் :

மதுரை அழகர்கோவில் பெருமாள் கள்ளழகர் என்ற பெயரில் அருளுவதைப் போல, திருச்சி திருநெடுங் குளத்தில் உள்ள சிவபெருமான்(நெடுங்குளநாதர்) "கள்ளர்' என்று அழைக்கப் படுகிறார். ஒரு சாபத்திற்காக சிவனைப் பிரிந்த அம்பிகை, மானிடப் பிறப்பெடுத்து இத்தலத்தில் அவரை இணைய வேண்டி தவமிருந்தாள். அப்போது, சிவன் திருடன் வடிவில் அவளை நெருங்கினார். கலங்கிய அம்பிகை, ஓடினாள். அங்கு வந்த அகத்தியர், கள்ளனாக வந்தது சிவனே என அம்பிகையிடம் கூறினார். அதன்பின், சிவன் சுயரூபம் காட்டி அவளை மணந்து கொண்டார். இங்கு அருளும் சிவனுக்கு, "கள்ள சிவன்' என்றும் பெயர் வழங்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் சிவனுக்கு அருகில் அம்பிகை அரூபமாக (உருவமின்றி) இருப்பதாக ஐதீகம். இதை உணர்த்தும் வகையில், அம்பிகைக்கு சற்று இடம் விட்டு, சிவலிங்கத்தை கருவறையின் நடுவில் இல்லாமல், சிறிது தள்ளி அமைத்து உள்ளார்கள். மேலும், இச்சன்னதியின் மேலே இரண்டு விமானங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒன்று அம்பாளுக் குரியது. இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். அம்பாள் மங்களாம்பிகைக்கு தனி சன்னதியும் இருக்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...